நான்கு திருத்தல யாத்திரை.!

வணக்கங்கள் நண்பர்களே.!

இரண்டுவார CHAR DHAM பயணத்தில் பெற்ற அதிர்வுகளும்,பரவசமும் ஏனோ இன்னுமும் அடங்கவேயில்லை.வழக்கமான உலகிற்கு வரவே இயலவில்லை. என்னதான் காரணம் என யோசித்ததில் பெரிதாக விடை ஏதும் கிடைக்கவில்லை என்றாலும்கூட,இதில் இருந்து மீள சின்னதாய் ஒரு வழி கிடைத்தது. 

ஒரு சதுரஅடி கூட சமதளம் இல்லாத...உலகின் உயரமான பிரம்மாண்ட மலைதொடர்களில் சுமார் 2000 கிலோமீட்டர்கள்...சிக்கல் விழுந்த நூல்கண்டு போல வளைந்து நெளிந்து முடிவேயில்லாத சாலையில் பயணித்து சேகரித்து வந்த ஒரு பொருளின் சுமையை இறக்கிவைப்பதன் மூலமாக அந்த வழி பிறக்கும் என நம்புகிறேன்.

அந்த பொருள் எல்லா உயிர்களுக்கும் ஜீவநாடியான தண்ணீர்.!

இந்த நான்கு புண்ணியதளத்திலும் உறவினர்களுக்கு வாங்கிவர,திருப்பதி லட்டு போல...பழனி பஞ்சாமிர்தம் போல...சபரிமலை சந்தனம் போல எதுவுமில்லை.இயற்கையான நீரோட்டமும்,பாறையுமே வழிபாட்டுகுறியவை. அங்கு பிரசாதமே....கொண்டுவந்து தரவேண்டிய பொருளே அங்கு பிரவாகமெடுத்து ஓடும் புண்ணிய நதிகளின் சில துளிகளே...அந்த புனிததீர்த்தமே பூஜிக்க வேண்டியவை என பயணத்தின் துவக்கத்திலேயே (என்னளவில்) புரிந்து  கொண்டுவிட்டேன்.

காரணம் எல்லா பெட்டிகடையிலும் தவறாமல் இருந்த ஒரு பொருள்... வகை வகையான தீர்த்தம் கொண்டு செல்ல தேவையான பிளாஸ்டிக் பாட்டில்களே. என்ன பாட்டிலின் தரம்தான் பயணத்திற்கு ஏற்றதாக இல்லை. சுகாதாரமாக ஆறு முக்கிய திருத்தலங்களில் 500 ml விதம் சேகரித்து எந்த சேதமும் இல்லாமல் இல்லம் கொண்டுவந்துதேன்.

இந்த புண்ணியதீர்த்த சேகரிப்பை முறையாக முக்கிய உறவினர்களுக்கு தர...
அவற்றை பூஜித்து, மகள் கையால் ஒன்றாக கலந்த போது...
சில உணர்வுகள் மேலோங்கி ஒரு வலிமையான எண்ணம் மேலோங்கியது.

அந்த உணர்வு உங்கள் பார்வைக்கு...


இப்படி ஒரு வேண்டுகோளுடன் இந்த வேள்வியை துவக்கிவைப்பதை ஒரு இருபது அன்பர்களுடன் முடித்துக்கொள்வதற்கு ஏனோ மனம் ஒப்பவில்லை. ஏன் இந்த வேள்வியை இந்த டிஜிட்டல் இந்தியாவில்பகிரக்கூடாது என்ற கேள்வியின் விளைவே இந்த தளம்.!

பிரஸாதம்...



இந்த தீர்த்தம் சேகரிப்புகள் பற்றிய சில படங்கள்...







உத்தரகாண்ட்டின் வெளியே நான் சந்தித்த அத்தனை நபர்களிடமும் char dham yatra என்றாலே கண்கள் விரிகின்றன.தானே கரங்கள் உயர்கின்றன.காரணம் அந்த நான்கு திருத்தல யாத்திரை என்பது அவர்களின் வாழ்நாள் லட்சியமாக உள்ளது.ஒவ்வொரு இந்துவும் வாழ்நாளில் பார்க்கவேண்டிய திருத்தலம் என்ற ஆழமான உணர்வு எல்லோரிடமும் வியாபித்துள்ளது.

இந்த திருதலத்தின் மகிமைகள் என்ன..? வரலாறு என்ன..? பூகோளம் என்ன..? என எனக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் இங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என்றோ எனக்குள் விதைக்கப்பட்டது. எனக்கு விதைக்கப்பட்டதை இன்று உங்களுக்கு எனக்கு தோன்றியவிதத்தில் விதைக்கிறேன்.



இந்த பயணம்  பக்திமார்க்கம் கொண்டவர்கள் மாத்திரமே மேற்கொள்வதாக ஒரு கருத்து உண்டு. ஆனால் நான் எந்த பயணங்கள் ஆயினும் ஒரு கொண்டாட்டமாவே பயணிக்கிறேன், பார்க்கிறேன்... ஸ்ரீகிருஷ்னரின் தத்துவப்படி..! 

உடையலங்காரம் மனதின் சந்தோஷத்தின் ஊற்று; பக்தி உடையில் காட்டப்படும் ஒன்றல்ல...மாறாக அது உள்ளுக்குள் மலர்ந்திருப்பது; மனதின் சந்தோஷம் அதை இன்னுமும் அழகாக மலரசெய்கிறது என்பது எனது நம்பிக்கை.!!

சில கொண்டாட்ட படங்கள்...













இந்த பயணத்தில் மையப்பகுதியாக நான் பெற்ற ஒரு உணர்வை மட்டும் உங்களுடன் பகிர்ந்துகொண்டு இந்த முதல் பதிவை நிறைவு செய்கிறேன்.

கடல்மட்டத்தில் இருந்து 11,200 அடி உயரத்தில் உள்ள கங்கோத்ரியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையே கங்கையின் பிறப்பிடமாகும். கங்கோத்ரியில் உள்ள நீரோட்டத்தின் பெயர் பாகீரதி என்பதாகும். இந்நீரோட்டம் தேவப்பிரயாகையில் தான் கங்கை எனும் பெயரைப் பெறுகிறது.

மலைபள்ளத்தாக்கில் உருண்டு புரண்டு காட்டாற்று வெள்ளமாக ஓடிவரும் அந்த கங்கோத்திரி கரையில் பிண்டங்கள் கரைப்பதும்,பல பூஜைகள் செய்வதுமாக என பல பகுதி மக்கள் ஒரு புறம். அந்த காட்டாற்று அழகை ரசிக்கும் மக்கள் மறுபுறம்.  கால்கள் நனைபதற்கும்,சில துளிகள் தலையில் தெளித்துக்கொள்வதற்கும் கூட கைகள் விறைத்துவிடும் கடும் குளிர். அந்த குளிர் தாங்காமல் தீர்த்த தெளிப்புக்கு சிலிர்த்து எழும் குரல்கள் ஒரு புறம்.

இதையெல்லாம் துளியும் பொருட்படுத்தாமல் காவி வேட்டி அணிந்த ஒன்றிரண்டு வயசாளிகள் சடாரென்று தரையில் பாதிக்கப்பட்ட இரும்பு சங்கிலியை கைகளில் சுற்றிக்கொண்டு அந்த காட்டாற்றில் இறங்கி மூன்று முறை முக்கி குளித்ததை பார்க்கும் அத்தனை பேருக்கும் ஒரு சிலிர்ப்பு.!

பாட்டிலில் தீர்த்தம் பிடிக்கவே கைகளை உதறிக்கொண்டிருந்த எனக்கு...அப்படி ஒரு குளியலை நாமும் போடுவோமே என தோன்றிட...
அங்கிருந்த பெரியவர் இடுப்புதுண்டு வாங்கி கட்டிக்கொண்டு,சங்கிலியை இறுகப்பற்றிக் கொண்டு காட்டாற்றில் முதல் முக்கல் முடித்து கரைக்கு தாவ...

இன்னுமும் இரண்டு மூழ்கல் அவசியம் என பெரியவர் அதட்ட...

மீண்டும் இறங்கி இரண்டு மூழ்கல் முடித்து கரையேறியது சில நொடி நிகழ்வே.! ஆயினும் அந்த பாய்ந்தோடும் குளிர்ந்த நீரோட்டம்...அக்கினியில் விழ்ந்த காகிதம் நொடியில் பஸ்பமாவது போலவே...நீரோட்ட குளிர் உடலில் இருந்த மொத்த வெப்பத்தையும் வாரியெடுத்துக் கொண்டு போய்விட்டது.

இந்த திடீர்தாக்குதலுக்கு தடுமாறிய உடல்...வெப்பமில்லா ரத்தம் ஓடமறுக்க...இதயம் துடிக்க தடுமாற.... மூளைக்கும் இதயத்திற்கும் ரத்த ஓட்டம் பாய்வது அறுந்துவிட... ஓட்டமில்லா உடல் ஒரு கணம் மொத்தமும் சவம்.! இருண்ட உள்உலகில் எங்கோ ஒரு அதாளபாதளத்தில் இருந்து துளியூண்டு அக்கினி சடசடவென ஆயிரம் வாலா போல மொத்த உடலுக்கும் வெப்பத்தை அள்ளி வீச...



உடலென்னும் எந்திரம்  உயிர்பெற்ற எழுந்த வேகம்...
ஒரு புது பிரவேஷம்.!

நட்புடன்
மாயாவி.சிவா

Comments

  1. அருமை.. மாயாஜிசார்.. என்றாவது ஒருநாள் வாய்ப்பு கிடைத்தால் செல்வோம்..🙏🙏🙏

    ReplyDelete
  2. அழகான ..,அருமையான ..

    பயணம் & பதிவு..

    ReplyDelete
  3. Replies
    1. அழகான பயணங்கள்... அருமையான பதிவு!

      Delete
  4. அருமை மாயாவி ஜி ... மேலே திரு கரூர் சரவணன் அவர்கள் கூறியது போல, நாம் அனைவரும் இந்த இடங்களுக்கு சேர்ந்து செல்ல ஒரு நாள் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் ...

    பகிர்தலுக்கு நன்றிகள் பல .... ____/\_____

    ReplyDelete

Post a Comment